சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி ஊழலுடன் தொடர்புடைய அனைவரதும் போலி முகத்திரைகள் விரைவில் வெளிப்படும் என முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமாகிய ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் பிணைமுறி ஊழல் குறித்து சிங்கள மொழி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
“பிணை முறி குறித்த சர்ச்சையில் நான் எவரையும் காப்பாற்ற முன்னின்றதில்லை, மற்றவர்களது கறைகளை என் மீது ஏன் தெறிக்க முயல்கிறீர்கள்..? மற்றவர்கள் அவ்வாறு பாவங்களை சேர்ப்பதில் ஆர்வமாயிருக்கலாம்.. நான் அவ்வாறு இல்லை, எனது அமைச்சு எனக்கு முக்கியம், ஆணைக்குழு முன்னிலையில் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.. அப்போது முகத்திரைகளும் கிழிக்கப்படும்..”
“எனது கட்சியில் உள்ள ஒருவருக்கு, தேசியப் பட்டியலினூடாக உள்வாங்கப்பட்ட குறித்த நபருக்கு மக்களைப் பற்றியோ நாட்டினைப் பற்றியோ எவ்வித கவலையும் இல்லை, குறித்த நபர் மக்களின் துயரினை கண்டுகொள்வதுமில்லை,இவரது உண்மைத் தோற்றத்தினை வெளிப்படுத்த நெடுநாள் செல்லாது, எங்களதும் பொறுமைக்கு எல்லை உண்டு, தேசியப் பட்டியல் ஊடாக நுழைந்த குறித்த அமைச்சர் பிரதமரின் பாதுகாப்பிற்காய் முன்னிற்பது போன்று நாடகமாடுகிறார், இவரது நடவடிக்கையினால் இவரது மீதிருந்த நம்பிக்கையும் இல்லாது போகும், மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படாத இவ்வாறான நபர்கள் நாட்டில் உயர் பதவிகளில் வைத்திருப்பதும் சிந்திக்க வேண்டியதொன்றே” என ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.