மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில், இன்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் அண்மையில் பந்துல குணவர்த்தன, மத்திய வங்கி விடயம் குறித்து சாட்சியமளிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் விண்ணப்பித்துள்ளதாக, ஊடகங்களிடம் வௌியிட்ட கருத்து தொடர்பில், இதன்போது விசாரிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் எழுத்து மூலம் விண்ணப்பிக்க எதிர்பார்ப்பதாகவே தான் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
எனினும், ஊடகங்களை மேற்கோள்காட்டி, எழுத்து மூலம் விண்ணப்பித்துள்ளதாகவே பந்துல கூறியுள்ளமை உறுதியாவதாக ஆணைக்குழுவினர் சுட்டிக்காட்டினர்.
அவ்வாறு இருப்பின் தான் வேண்டுமென்றே கூறவில்லை, தவறாக வார்த்தைகள் வந்திருக்கும் என பந்துல அதற்கு பதிலளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இதுபோன்ற கருத்துக்கள் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, அதன் தலைவர் கே.டி.சித்ரணசிறி குறிப்பிட்டார்.
அத்துடன், ஆணைக்குழு தொடர்பில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை நிலைகுலைய இதுபோன்ற கருத்துக்கள் காரணமாக அமையும் எனவும் அவர் கூறினார்.
மேலும், ஆணைக்குழுவின் நம்பகத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற கருத்துக்களை இனிமேல் வௌியிட வேண்டாம் எனவும் அவர் பந்துல குணவர்த்தனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
————— UPDATE 12:05
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் குறித்து இன்று(09) பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளார்.
இதற்கமைய இன்று காலை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் தான் அறிந்த அனைத்து தகவல்களையும் ஆணைக்குழு முன்னிலையில் கூறவுள்ளதாகவும் பந்துல குணவர்த்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.