மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி காலை 10 மணியளவில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு குறித்த ஆணைக்குழு அழைப்பு விடுத்திருக்கிறது.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே இலங்கை மத்திய வங்கியில் பிணை, முறிகள் விற்பனையில் பாரிய மோசடி இடம்பெற்றதாக சலசலப்பான தகவல்கள் வெளியாகின.
இது குறித்து விசாரணை நடத்திய கோப் குழு, தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பித்ததோடு, அதில் மத்திய வங்கியின் மோசடி உறுதிப்படுத்தப்பட்டது.
அதற்கு முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனும் பொறுப்பு கூற வேண்டும் என்றும், இது குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்து அதனூடாக மத்திய வங்கியிலுள்ள அனைத்து தரப்பினரும் விசாரணை செய்யப்பட்ட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்கமைய உச்சநீதிமன்ற நீதியரசரான கே.ரி. சித்திரசிறி தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் விசாரணைக் குழு ஒன்றை நியமித்தார்.
இந்தக் குழு மூன்று வாரங்களுக்குள் விசாரணை செய்து, அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கும் பொறுப்பை கொண்டிருப்பதோடு முதல் விசாரணையை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநரான இந்திரஜித் குமாரசுவாமியிடம் இருந்து ஆரம்பிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.