அல்கைதா தலைவர் பின்லேடன், கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது, அந்த இடத்தில் இருந்த 113 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அராபிய மொழியில் இருந்த அந்த ஆவணங்கள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
அவற்றில் முக்கியமான சில ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்புகள் தற்போது வெளியிட்டுள்ளன.
சூடான் நாட்டில் தான் விட்டுச்சென்ற 29 மில்லியன் டொலரை தனது இறப்புக்கு பிறகு எப்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி பின்லேடன் எழுதிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூடானில் தனது சொத்தில் ஒரு சதவீத பணத்தை அல்கைதா மூத்த தலைவர் மபூஸ் அவுல்ட் அல்-வாலித்துக்கு கொடுக்க வேண்டும் அதில் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரூ.20 லட்சம்வரை அல்-வாலித்துக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும், சூடானில் உள்ள பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், அவருக்கு பரிசு கொடுப்பதாக, தான் வாக்குறுதி அளித்திருப்பதாகவும் பின்லேடன் அதில் எழுதி உள்ளார்.
இன்னொரு சதவீத பணத்தை மற்றொரு நண்பரான என்ஜினீயர் அபு இப்ராகிம் அல்-இராகி சாத்துக்கு கொடுக்க வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார். அந்த நபர், சூடானில் பின்லேடனின் முதலாவது நிறுவனத்தை நிறுவ உதவியவர் ஆவார்.
குறிப்பிட்ட அளவு சவுதி ரியால் பணத்தையும், தங்கத்தையும் தனது தாயார், மகன், மகள், சித்தப்பா, சித்தப்பாவின் பிள்ளைகள், தாயாரின் சகோதரிகள் ஆகியோர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார்.
மீதி பணம் முழுவதையும், புனித போருக்காக பயன்படுத்துமாறு பின்லேடன் கேட்டுக்கொண்டுள்ளார். தனது விருப்பத்தை நிறைவேற்றுமாறு குடும்பத்தினரை வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி பின்லேடன் எழுதிய மற்றொரு கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தந்தைக்கு முன்பே, தான் இறந்து விட்டால், தன்னுடைய மனைவியையும், பிள்ளைகளையும் தந்தை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார்.
‘உங்களுக்கு பிடிக்காததை நான் செய்திருந்தால் என்னை மன்னியுங்கள்’ என்று கடிதத்தின் இறுதியில் தந்தையிடம் பின்லேடன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.