இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(14) இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உட்பட இந்தியாவின் சிரேஷ்ட தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தி பிராந்திய சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வது குறித்து இப்பேச்சுவார்த்தைகளின்போது இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்துவர் என நம்பப்படுகின்றது.
ரணில் இம்முறை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிகச் செயலாளர் சமன் அத்தாவுட ஹெட்டி, இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவிருக்கும் எசல வீரக்கோன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
(riz)