பிரான்ஸில் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவிரவாத குற்றச்சாட்டுக்குள்ளானவர்களின் பிரஜாவுரிமையை இரத்துச் செய்வது தொடர்பான திட்டம் குறித்து விவாதத்தில் ஈடுபடுவதற்கு சிறிது முன்னர் அந்நாட்டு நீதி அமைச்சர் கிறிஸ்ரியன் தோபிரா பதவி விலகியுள்ளார்.
அவரது பதவி விலகலை பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்ட் ஏற்றுக் கொண்டுள்ளதாக எலிஸி மாளிகை தெரிவித்தது.
மேற்படி சர்ச்சைக்குரிய பிரேரணை தொடர்பில் கிறிஸ்ரியன் தோபிரா கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் நவம்பர் 13 ஆம் திகதி பாரிஸில் 130 பேர் பலியாவதற்கு காரணமான தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களின் பிரஜாவுரிமையை நீக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.
பிரான்ஸின் சிரேஷ்ட கறுப்பின அரசியல்வாதிகள் சிலரில் ஒருவராகவுள்ள கிறிஸ்ரியன் தோபிராவின் இடத்திற்கு அந்தத் திட்டத்தின் ஆதரவாளரான ஜீன் ஜக்குயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரெஞ் கயானாவில் பிறந்த கிறிஸ்ரியன் தோபிரா நீதி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இன ரீதியான இகழ்ச்சி விமர்சனங்களால் துன்பப்பட நேர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.