பிரிட்டனில் கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் வடக்கு இங்கிலாந்தின் டெர்பிஷைர் கவுண்டியில் உள்ள செஸ்டர்பீல்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று(19) பொலிசார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையின்போது 31 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உடனடியாக குறித்த வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இதேபோல் ஷெபீல்டு கவுண்டியில் வெவ்வேறு இடங்களில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் கைது செய்யப்படாவிட்டால் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.