பிரியங்கர ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் – நிஷாந்தவுக்கு அழைப்பாணை

ஸ்ரீலங்கன் ஏயார் லன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளை பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று முன்னெடுத்துள்ளது.

இந்தக் குறித்த விசாரணைகளுக்காக முன்னாள் விமான சேவை அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகியுள்ளார்.

ஆணைக்குழு முன்னிலைக்கு இன்று(28) காலை 09.00 மணியளவில் அவர் வந்ததாக, அதன் செயலாளர் லெசில் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பிரியங்கர ஜயரத்ன சிவில் விமான சேவைகள் அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை கேடரிங் (Sri Lankan Catering) நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான வாக்குமுலத்தை பதிவு செய்யவே அவர் அழைக்கப்பட்டதாகவும், லெசில் டீ சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து ஶ்ரீ லங்கன் எயாலைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவிடமும் வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிஷாந்த விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.