பிரியாவிடையில் எதிரணியை களங்கடித்த மெக்கல்லம் (VIDEO)

நியூஸிலாந்து – அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது.

இது நியூஸிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மெக்கல்லம் விளையாடும் கடைசி சர்வதேச ஒரு நாள் தொடராகும். இதன்பிறகு நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

எனவே அவருடைய கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றி மெக்கல்லத்துக்கு சிறப்பான முறையில் பிரியா விடைகொடுக்க நியூஸிலாந்து அணி முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.

3-வது ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி, களத்தடுப்பைத் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய மெக்கலமுக்கு கைதட்டி அவுஸ்திரேலிய வீரர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

ஹேஸ்டிங்ஸ் வீசிய 2-வது ஓவரில் வழக்கமான அதிரடியுடன் தொடங்கிய மெக்கல்லம், மூன்று பவுண்டரிகளை விளாசினார். பிறகு போலண்ட் வீசிய பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். அதோடு விடவில்லை. போலண்டின் அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அந்த ஓவரில் மட்டும் 16 ஓட்டங்களைக் குவித்தார்.

பிறகு மிட்செல் மார்ஷின் பந்துவீச்சில் ஒரு பவுண்டரி அடித்தவுடன் அடுத்தப் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். தன்னுடைய கடைசி ஒருநாள் போட்டியில் 27 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்தார் மெக்கல்லம்.

முதலில் ஆடிய நியூசிலாந்து, 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதன்படி 247 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்ததாக அவுஸ்திரேலியா தற்போது தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.

மெக்கல்லம் துடுப்பெடுத்தாட வருகையில் அவுஸ்திரேலிய வீரர்கள் அவரை வரவேற்ற காணொளியை கீழே காணலாம்…

[youtube url=”https://www.youtube.com/watch?v=HCbcmkJmPzA” width=”560″ height=”315″]