பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வோஸ்னியாக்கி அபாரம்

பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கி அபார வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில், 5ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் வோஸ்னியாக்கி 6-3, 6-0 என்ற நேர் செட்களில் இத்தாலியின் கரின் நாப்பை வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறினார். 4ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் குவித்தோவா 6-4, 3-6, 6-4 என்ற செட்களில் நியூசிலாந்தின் மரினா எராகோவிக்கை போராடி வென்றார். 6ம் நிலை வீராங்கனையான கனடாவின் பவுச்சர்ட் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் பிரான்சின் மிலாடெனோவிக்கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மற்ற போட்டிகளில், ஜெர்மனியின் பெட்கோவிக், ரஷ்யாவின் கஸ்னட்சோவா ஆகியோர் 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றனர். 3 முறை அரை இறுதிக்கு முன்னேறியவரான செர்பியாவின் ஜன்கோவிக் தோல்வி அடைந்தார். முன்னதாக நேற்று முன்தினம் நடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ரஷ்யாவின் மரியா ஷரபோவா 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றார். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்சின் ஹாலிசை வீழ்த்தினார். நம்பர்-1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6-2, 7-5, 6-2 என்ற செட்களில் பின்லாந்தின் ஜெர்க்கோ நீமினனை வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.ஸ்பெயினின் டேவிட் பெரர், குரோஷியாவின் சிலிக் ஆகியோர் 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றனர். மகேஷ் பூபதி ஏமாற்றம்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ்பூபதி, நிக் கைய்ர்ஜியாஸ் (ஆஸி) ஜோடி 3-6, 1-6 என்ற  செட்களில் கொகினாகிஸ் (ஆஸி.), பொவுலி (பிரான்ஸ்) ஜோடியிடம் முதல் சுற்றிலேயே தோற்றது