புகையிரத இயந்திர சாரதிகள் பணிபகிஷ்கரிப்பில்…

புகையிரத இயந்திர சாரதி உதவியாளர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத இயந்திர சாரதிகள் நேற்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு இடம்பெறுகின்றபோதும், சில புகையிரத பயண சேவைகளை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த ஆட்சேர்ப்பு முறைமை தொடர்பான அறிவிப்பை மீளப் பெறுமாறு கோரியுள்ளதாகவும், ஆனால் முகாமைத்துவ தரப்பிலிருந்து அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலும், சில புகையிரத சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், முகாமைத்துவத்தால் உரிய தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால், இன்று(07) மாலை வேளையில் அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.