புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என வெளியான செய்தியை மறுக்கிறேன்.. – பிரதமர்

மல்வத்தை மஹாநாயக்கர் நாட்டில் இல்லாத வேளையில், புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை பிழையானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரது உத்தியோகப்பூர்வ முகநூலில் பதிவொன்றினை பதிவு செய்துள்ளார்.

அரசியல் யாப்பு வழிநடத்தலிற்கு குழுவின் இடைக்கால அறிக்கையை, இலங்கை ஊடக கல்லூரி உள்ளிட்ட 3 நிறுவனங்கள் பகுப்பாய்வு செய்து தயாரித்த அறிக்கை இன்று(19) பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டிருந்தார்.

அஸ்கிரிய மற்றும் மஹாநாயக்க தேரர்கள் ஒன்று கூடி, தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றோ, யாப்பின் திருத்தமோ தேவையில்லை என்று தீர்மானித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்தியை பல ஊடகங்கள் பிரதான தலைப்புச் செய்தியாக வெளியிட்டு மல்வத்தை மஹாநாயக்கரின் படத்தையும் பிரசுரித்திருந்தன. ஆனால் அவர் நாட்டிலேயே இல்லை. இன்று(19) காலையும் தாம் அவருடன் கலந்துரையாடியதாகவும் அவர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மஹாநாயக்க தேரர் கலந்து கொள்ளாத ஒரு கூட்டத்தில் அவர் புதிய அரசியல் யாப்பு தயாரிப்புக்கு எதிராக தீர்மானம் மேற்கொண்டதாக செய்தி வெளியிட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் இன்னும் அரசியல் யாப்பு தயாரிக்கப்படவில்லை என்றும், அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மாத்திரமே இடம்பெறுவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Image may contain: text

(rizmira)