மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் அனுபவ பந்துவீச்சாளர் அஸ்வினை சரியாக பயன்படுத்தாதது பற்றி டோனி விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வினுக்கு1 ஓவர் மட்டுமே வழங்கப்பட்டது. டி20 உலகக்கிண்ண தொடரிலிருந்தே அஸ்வினை டோனி முழுமையாக பயன்படுத்துவதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக புனே அணியின் தலைவர் டோனி கூறுகையில், “அஸ்வின் பற்றி நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அவர் என்னை பல சூழ்நிலைகளில் காப்பாற்றியிருக்கிறார்.
அவர் ஒரு அனுபவ பந்துவீச்சாளர், எந்த நேரத்திலும் அவரால் வீசமுடியும். மும்பை இந்தியன்ஸ் சில விக்கெட்டுகளை தொடக்கத்தில் பறிகொடுத்தவுடனேயே வீரர்களிடையே கடும் அழுத்தம் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும்.
இந்த நிலையில் அறிமுக ’லெக்ஸ்பின்னர்’ முருகன் அஸ்வினைக் கொண்டு வர சரியான நேரம் இதுவே என்று நினைத்தேன். ஆனால் அவருக்கும் அழுத்தம் இருந்தது.
மும்பை அணி தடுமாறும் இது போன்ற தருணத்தில் முருகன் அஸ்வினின் 4 ஓவர்களை கொடுத்து முடித்து விட்டால், 2வது, 3வது ஆட்டங்களில் அவருக்கு இது கூடுதல் தன்னம்பிக்கை அளிக்கும்.
இது அவருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கையே. ஆனால் அதே வேளையில் எதிர்முனையிலிருந்து நாங்கள் நெருக்குதல் கொடுத்தோம்.
ஆனால் அதன் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ஓவர் வீசினார், அதன் பிறகே நான் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் நல்ல தெரிவு என்று நினைத்து செயல்பட்டேன்” என்று கூறியுள்ளார்.