(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
முற்போக்கு அரசியல் கட்சிகளுடன் இணைந்து உருவாக்க திட்டமிட்டுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் தமது அணி தீர்மானிக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கு தலைமை தாங்குவதற்கு வீரவன்சவின் பெயரை முன்மொழிவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சிப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தாங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ள புதிய கூட்டணிக்கான பெயரையோ அல்லது தலைமைத்துவக் கட்டமைப்பையோ இறுதி செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நாடு எதிர்கொள்ளும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அன்றாட பிரச்சினைகளை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் முறைகள் குறித்தும் விவாதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தீங்கிழைக்கும் மூன்றாம் தரப்பினரால் எதிர்பார்க்கப்படும் பாதகமான சூழ்நிலையை உருவாக்குவதை தடுப்பதற்கு மக்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான தமது கட்சியின் முன்மொழிவுகள் நீதி அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
21 ஆவது திருத்தம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க தமது தரப்பும் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.