புதிய சுங்க சட்டமூலம் தொடர்பில் சர்ச்சை – தொடரும் போராட்டம்

புதிய சுங்க சட்டமூலம் தொடர்பில் நிதி அமைச்சின் ​செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை என, சுங்க பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால், குறித்த சட்டமூலத்துக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக, அந்த அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுங்க தொழிற்சங்கங்கள் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இன்னும் புதிய சுங்க சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை எனவும், இது குறித்து யோசனைகளை முன்வைக்க முடியும் எனவும், நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதற்கு மறுப்பு வௌியிட்ட சுங்க தொழிற்சங்கங்கள், தற்போதுள்ள சுங்க சட்டமூலத்தின் குறைபாடுகளை தெரிவிக்குமாறு, கோரியுள்ளதாக சுங்க பாதுகாப்பு அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், குறைபாடுகள் இருப்பின் மாத்திரமே புதிய சட்டமூலத்துக்கான யோசனைகளை முன்வைக்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, நிதி அமைச்சின் செயலாளர் கலந்துரையாடலை இடைநிறுத்தி விட்டு அங்கிருந்து எழுந்து சென்றதாக குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.