பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸாரின் பயிற்சியைப் பெறுவதற்காக, ஐக்கிய இராச்சியத்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அப்பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதென, சட்டமும் ஒழுங்கும் பிரதியமைச்சர் நளின் பண்டார, நேற்று(30) தெரிவித்தார்.
பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பொலிஸ்மா அதிபர் மீது, விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஐ.இராச்சியத்துக்காக அவர், நேற்றுப் புறப்படவிருந்த நிலையில்,உயர்மட்ட உத்தரவைத் தொடர்ந்து, அவரது பயணம் இரத்துச் செய்யப்பட்டது என, அரசாங்கத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிசாரின் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் இடம்பெறவிருந்தது.
ஆனால், ஐ.இராச்சியத் தகவல்களின்படி, இந்தப் பயிற்சி தொடர்பாக, ஐ.இராச்சியத்தின் வாழும் தமிழ் மக்களின் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, பயிற்சித் திட்டத்தைப் பிற்போடும் முடிவை, ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டுச் செயலகம் எடுத்தது என, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பயிற்சி, மீள ஏற்பாடு செய்யப்படுமா என்பது, இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.