‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
இதில் 9-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர், மான்பில்ஸ்சை (பிரான்ஸ்) சந்தித்தார்.
17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான பெடரர் 6-3, 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் மான்பில்ஸ்சை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சக நாட்டு வீராங்கனை சலோன் ஸ்டீபன்சை எதிர்கொண்டார்.
19 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அனுபவ வீராங்கனையான செரீனா முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் இழந்தார்.
அதன் பின்னர் சுதாரித்து ஆடிய செரீனா அடுத்த 2 செட்களையும் 7-5, 6-3 என்ற கணக்கில் தனதாக்கி வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
செரீனா வில்லியம்ஸ் கால் இறுதியில் இத்தாலி வீராங்கனை சாரா எர்ரானியை சந்திக்கிறார்.
சாரா எர்ரானி 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸ்சை தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார்.
இன்னொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருசா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் இத்தாலி வீராங்கனை பிளாவியா பென்னட்டாவை தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார்.