பென்டகனிடம் சம்பளம் வாங்கிய சின்னையா தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே.. – விமல் சாடல்..

இலங்கைக் கடற்படையின் 21ஆவது தளபதியாக றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், “..அமெரிக்க இராணுவத் தலைமையகத்திடமிருந்து (பென்டகன்) சம்பளம் வாங்கிய சின்னையாவை கடற்படைத் தளபதியாக நியமித்து தேசியப் பாதுகாப்பை அரசு பலிகொடுத்துள்ளதாக..” நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டி உள்ளார்.

அவர் தொடர்ந்தும் இது குறித்து கூறுகையில்,

“..கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சின்னையாவின் இனம் குறித்து எமக்குப் பிரச்சினை இல்லை. போர் முடிவடைந்ததும் அவர் கடற்படையிலிருந்து பதவி விலகிச் செல்வதாக அதற்குரிய கடிதத்தையும் கையளித்திருந்தார். அதன் பின்னர் அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நான்கு வருடங்கள் பணியாற்றினார். அவருக்கு அமெரிக்க இராணுவத் தலைமையகத்தில் இருந்தே சம்பளம் வழங்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசியல் பழிவாங்கலுக்குள்ளானவர் என்ற போர்வையில் சின்னையா மீண்டும் கடற்படைக்கு உள்வாங்கப்பட்டு, கிழக்குப் பிராந்தியத்துக்கான கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் தற்போது கடற்படைத் தளபதியாக்கப்பட்டுள்ளார். இலங்கையின் கடல் பாதுகாப்புக்கு குறிப்பாக, திருகோணமலை துறைமுகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நாடாக விளங்கும் அமெரிக்கா, கடல் பாதுகாப்பு குறித்து விழிப்பாக இருந்து வருகின்றது.

எனவே, அந்நாட்டுக்குத் தேவையான ஒருவரை கடற்படைத் தளபதியாக்கினால் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு என்ன நடக்கும்? போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு படையினர் இன்று சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இராணுவம், கடற்படையைச் சேர்ந்த புலனாய்வாளர்களை சிறையில் அடைத்து தேசியப் பாதுகாப்பை தினம், தினம் அரசு பலிகொடுத்து வருகின்றது. வடக்கில் இன்று பொலிஸாருக்குத் தமது கடமையைச் செய்ய முடியாதுள்ளது. நீதிபதி ஒருவரால்கூட இன்று சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளது..” என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)