பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..

மஹரகம, பன்னிப்பிடிய பகுதியில் ஆலமரம் ஒன்றை வெட்டி, நீக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்ட தீர்மானத்தை செயற்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பௌத்த பிக்குகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த போதே, உயர்நீதிமன்றம் குறித்த இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மரம் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புனித வரலாற்றைக் கொண்டது எனவும், வீதி விஸ்தரிப்பு பணிகள் எனக் கூறிக் கொண்டு, அந்த மரத்தை வெட்டி நீக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை தயாராகி வருவதாகவும், மரத்தை வெட்டாமலேயே வீதியை விஸ்தரிக்க முடியும் எனவும், மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் ஆலமரத்தை வெட்ட எதிர்வரும் 9ம் திகதி வரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அன்றைய தினம், மனுவை மீள ஆராய்வதாகவும், இது தொடர்பான விபரங்களை முன்வைக்குமாறும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

(rizmira)