பெவிதி ஹன்ட என்ற சிங்கள பௌத்த அமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவ ஆனந்ததேரை தொலைபேசியில் அழைத்து பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு ஜனாதிபதி தமக்கு அழைப்பு விடுத்தார் என நாரஹென்பிட்டி அபயராமயவில் நேற்று(06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அமைப்பின் உப தலைவர் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர், அமைப்பின் ஆலோசகர் பேராசிரியர் இந்துராம்பே தம்மரத்ன மற்றும் ஒமர்பே காசியப்ப உள்ளிட்ட சில பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை இன்று சந்திக்க உள்ளார்கள்.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
நாளை எமது அமைப்பினால் நடத்தப்படவுள்ள சத்தியாக்கிரக போராட்டம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டறிந்து கொண்டார் என முரத்தட்டுவே ஆனந்த தேரர் செய்தியாளர் சந்திப்பில் மேலும் கூறியுள்ளார்.
ஐக்கிய இலங்கையை இரண்டாக பிளவடையச் செய்யக் கூடாது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளின் அடிப்படையில் பெவிதி ஹன்ட அமைப்பு நாளை புறக்கோட்டையில் சத்தியக்கிரக போராட்டமொன்றை நடத்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நாளை முற்பகல் 10.30 அளவில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
சிங்ஹல மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த புதிய அமைப்பு உருவாக்கம்
சிங்ஹல மக்களின் அடையாளத்தை பாதுகாப்பதற்காக சிங்ஹல ஜாதிக பலமுலுவல என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது கருத்துரைத்த அமைப்பின் தலைவர் யக்கலமுல்ல பாவர தேரர், சிங்ஹல மக்களின் இறைமையை மீண்டும் உறுதிப்படுத்தும் முகமாகவே தமது அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் சிங்ஹல மக்கள் அமைதியை கடைப்பிடித்து வந்தமை காரணமாக அவர்களின் அடையாளத்தை பாதுகாக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
தமது அமைப்பு அரசியல்வயப்பட்டதல்ல என்று குறிப்பிட்ட அவர், சிங்ஹல மக்களின் உரிமைகளை பாதுகாப்பதே அமைப்பின் பிரதான நோக்கம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி அமைப்பின் முதல் நடவடிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.