அரசு மேற்கொண்ட பேரூந்து கட்டண அதிகரிப்புக்கு எதிராக பயணிகள் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமாக இருப்பினும், அவர்கள் அவ்வாறான நடவடிக்கைக்கு செல்லாது தவிர்ந்து கொள்வதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இம்முறை பேரூந்து கட்டணத்தை 6.28% ஆல் அதிகரித்தது. குறித்த இந்த அதிகரிப்பு நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி நீதிமன்றம் செல்ல பயணிகளுக்கோ அல்லது வேறு தரப்பினருக்கோ முடியும் எனவும், தற்பொழுது அந்த தேவை எழுந்துள்ளதாகவும் நேற்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு நினைத்த பிரகாரம் பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க முடியாது. 2002 ஆம் ஆண்டு பேரூந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்க புத்திஜீவிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவிடம் எந்தவித ஆலோசனையும் இன்றியே இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து ஆணைக்குழு எதனையும் சரியாக செய்வதில்லை. திருட்டுத் தனமாக போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் ஒழுங்காக விநியோகித்து வருகின்றது.
இந்த கட்டணம் தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள சூத்திர முறை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இந்த முறைமை 2018 ஆம் ஆண்டு எந்தவிதத்திலும் செயற்பாட்டுக்கு வரக் கூடாது. இந்த கட்டண அதிகரிப்பு பேரூந்து சாரதிகளுக்கும், நடாத்துனர்களுக்குமே சிறந்தது.
எதிர்வரும் வருடத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு கட்டணம் கிலோ மீற்றர் அடிப்படையில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.