பொதுபல சேனாவின் பொதுச்செயலாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஊடகவியலாளர் பிரகீத் என்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க, நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

எக்னெலிகொட காணாமல்போன வழக்கில், சந்தியா என்னெலிகொட சாட்சியாளர் ஆவார். குற்றவியல் ஏற்பாடுகள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம், சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், பிணை வழங்குவதற்கு நீதவான் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று, பாதிக்கப்பட்ட (சந்தியா எக்னெலிகொட) தரப்பின் சட்டத்தரணி கூறினார்.

இந்தச் சட்டம் தொடர்பில் பிரச்சினைகள் இருப்பதனால், எழுத்து மூலமாக அறிக்கையை முன்வைக்குமாறு இருதரப்புக்கும் கட்டளையிட்ட நீதவான், அதுவரையிலும் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.