முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கும் ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவருக்கும் இடையே கடந்த 14ம் திகதி இரண்டு மணி நேர விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் நாட்டின் பிரதான மதம் குறித்தும், தற்போது முஸ்லிம்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் அதன் பிரதான செயலாளர் எம்.எம் முபாரக் உள்ளிட்ட முஸ்லிம் மதத் தலைவர்களுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பொதுபல சேனா அமைப்புடன் தான் எவ்வித தொடர்புகளையும் மேற்கொள்ளவில்லை என்றும், குறித்த அமைப்பின் தொடக்க நிகழ்வொன்றுக்கு கலந்துகொண்டதாவது, விமலஜோதி தேரரின் கோரிக்கைக்கு அமையவே என கோட்டபாய ராஜபக்ஷ உலமாக்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும், குறித்த நிகழ்வினை கருத்தில் கொண்டு பலர் பிழையான விதத்தில் புரிந்து கொண்டதாகவும், உண்மையாக பொதுபல சேனா அமைப்பு யாருடன் சேர்ந்து இருப்பது என தெளிவாக எதிர்வரும் காலங்களில் புரிந்துகொள்ள முடியும் எனவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கலந்து கொள்வது குறித்து குறித்த கலந்துரையாடலில் முஸ்லிம் தலைவர்கள் வினவியபோது, அது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.