பொதுப்போக்குவரத்து சேவையை பயணிகளின் பாராட்டைப்பெறும் சேவையாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி…

நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவையை பயணிகளின் பாராட்டைப்பெறும் சேவையாக மாற்ற வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொதுப்போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தி முறையான போக்குவரத்து சேவையாக அதனை பேணுவது தொடர்பாக நேற்று(13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு, தரமான பொதுப்போக்குவரத்து சேவையை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘சஹசர’ திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும் தரமான போக்குவரத்து சேவையை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பது பற்றியும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2008ஆம் ஆண்டு மொத்தப் பயணிகளில் 65 வீதமானவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்திவந்த நிலையில், அது தற்போது 40 வீதமாக குறைவடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமையை மாற்றி வினைத்திறன் வாய்ந்ததும் முறையானதுமான பொதுப்போக்குவரத்து சேவையை நாட்டில் ஏற்படுத்துவது தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.