நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, நில் மற்றும் ஜிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ள நிலையில், களனி கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக, நீர்வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தாழ்நிலப் பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்து அறிவித்துள்ளது.
மேலும், மழை காரணமாக காலி, மாத்தறை, ரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் பல இடங்கள் நீரில் மூழ்கியும் கொழும்பு மாவட்டத்தில், பாதுக்க பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிக மழையின் காரணமாக தெனியாய பகுதியில் 40க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நீரில் மூழ்கியுள்ள பிரதேசங்களில் இருந்து பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளில் கடற்படையினரும், விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிங்கங்கை பெருக்கெடுப்பால், காலி மாவட்டத்தின் நெலுவ, ஹபரகட மற்றம் மொரவக்க ஆகிய பகுதிகளும், யக்கலமுல்ல, அமதுவ, வல்பொல, நவலம, தவலகம போன்ற பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
களு கங்கை பெருக்கெடுப்பினால் களுத்துறை மாவட்டத்தின், பாலிந்த நுவர, புலத் சிங்கள, அகலவத்தை போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபடியாக இரத்தினபுரி மாவட்டத்தில் 196.7mm மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் 150mmஅளவில் மழை பெய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.