பொது மன்னிப்பு வழங்குமாறு தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் கைவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னதாக தங்கள் அனைவரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் அல்லது பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட தமிழ் அரசியல் கைதிகள், அவ்வாறு செய்யாவிட்டால் சாத்வீக ரீதியான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு தயாரென அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது. நேற்றிலிருந்து வரும் 10 நாட்களில் புனர்வாழ்வுக்கான முதலாவது குழுவை அனுப்பிவைப்பதற்கும் தயாராக இருப்பதாக அரசாங்கம் மேலும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் புனர்வாழ்வு பெறுவதற்கு தயார் என்று தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான கடிதமொன்றையும் சிறைச்சாலை ஆணையபளர் ஊடாக தமிழ் அரசியல் கைதிகள் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.