யுத்தம் தொடர்பான பொறுப்பு கூறல் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது அமர்வில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
நீண்டகால பொறிமுறையின் ஆரம்ப கட்டத்திலேயே இலங்கை தற்போதும் உள்ளதாக நெதர்லாந்தின் நிரந்தர வதிவிட பிரதிநிதியும் தூதுவருமான ரொட்ரிக் வான் ஷிரேஃபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகளுக்கான மேலும் பல பொறுப்புக்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம், நியாயம் மற்றும் பொறுப்புகூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான பொறுப்புக்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதாகவும் ரொட்ரிக் வான் ஷிரேஃபர் கூறியுள்ளார்.
உண்மையை கண்டறிவதற்கான புதிய பொறிமுறை உருவாக்கம், நியாயம், நட்டஈடு மற்றும் கடந்தகால சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்யும் போது பால் வேறுபாடு இன்றி பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்தினருடனான கலந்துரையாடலை நடத்துவது அதற்கான வசதிகளை ஏற்படுத்துவது அத்தியாவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு ஏற்றவகையில் நம்பகத்தன்மை மற்றும் உண்மையை உணரும் செயற்பாடுகளை உறுதிப்படுத்த பொறுப்புகூறல் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.