பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் நிலவி வரும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பொலிஸ் ஒழுக்கக்கோவையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஒழுக்கக்கோவை, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதம் முதல் நாடு முழுவதும் இப்பொலிஸ் ஒழுக்கக் கோவை அமுல்படுத்தப்படும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு நட்பான பொலிஸ் சேவையை உருவாக்கவும், பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைய அதன் பணிகளை முன்னெடுக்கவும் இவ்வாறான ஓர் ஒழுக்கக்கோவை தேவைப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், பொலிஸ் மா அதிபரின் இணக்கத்துடன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த ஒழுக்கக்கோவை தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கோவையை அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் வாசித்து கையொப்பமிட வேண்டும். இன்னும், அனைத்து உத்தியோகத்தர்களும் பதவி உயர்வு பெறும் போது உரத்த குரலில் இந்த ஆவணத்தை வாசித்து கையொப்பமிட வேண்டும்.
தற்போது காணப்படும் ஒழுக்கக் கோவை, காலம் கடந்த ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.