பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக இலங்கை சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

கேகாலை கொஸ்கொட பகுதியில் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஆற்றிய உரையொன்றுக்கு எதிராகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை தனது தேவைக்கேற்ற விதத்தில் பயன்படுத்த முடியும் எனவும், பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தினால், அவர்களை இல்லாது செய்யும் வகையில் மீள தாக்க வேண்டும் எனவும் பொலிஸ் மாஅதிபர் கருத்து தெரிவித்துள்ளதாக இலங்கை சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த கருத்துக்கள் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்தே அவர்கள் இன்றைய தினம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

பொலிஸாரின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கருத்துக்கள் அமைந்துள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த கருத்தின் ஊடாக அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த விடயம் குறித்து விசாரணைகளை நடாத்தி, பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்குமாறு இலங்கை சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.