போக்குவரத்தின்போது இடம்பெறும் குற்றங்களுக்கான தண்டப் பணத்தில் மாற்றம் – சரத் விஜிதகுமார

போக்குவரத்தின்போது இடம்பெறும் பாரியளவான 7 குற்றங்களுக்கான தண்டனை தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழு, இந்த ஏழு குற்றங்களுக்கான 5,000 சதவீதத்தினால் அபராதத் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரை செய்துள்ளது என, மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சரத் விஜிதகுமார தெரிவித்துள்ளார்.

7 குற்றங்களுக்கான அபராதத் தொகையை, 25,000 ரூபாயாக அரசாங்கம் பரிந்துரை செய்திருந்த நிலையில், அந்தப் பரிந்துரைக்கு, பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவோர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே, இவற்றை ஆராய்வதற்காக ஜனாதிபதி, குழுவொன்றை நியமித்திருந்தார்.

இந்தக் குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படின், ஏனைய போக்குவரத்துச் சேவைகள் அடங்கலாக, சகல தனியார் பஸ் சங்கங்களும், கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம் செய்யுமென அவர் தெரிவித்தார்.

இந்தக் குழுவானது, ஆகக்குறைந்த 20 ரூபாய் அபராதத்தை, 1,000 ரூபாயாக மாற்றியுள்ளது. 25,000 ரூபாய் அபராதத்தை, 30,000 ரூபாயாக மாற்றியுள்ளது.

இந்தத் தண்டனைகள், 150,000 ரூபாய் வரை அதிகரிக்கலாம். அத்துடன், நீதிமன்றங்களின் ஊடாக 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனையும் வழங்கப்படலாமென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.