போக்குவரத்து திணைக்களத்திலிருந்த குறிப்பிட்ட சில வாகன பதிவு பத்திரங்கள் அடங்கிய கோவைகளை முன்னாள் மோட்டார் பதிவு திணைக்கள நிர்வாக ஆணையாளர் தனிபட்ட முறையில் எடுத்து சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசு சாரா தொண்டு நிறுவனமான ஊழல் தடுப்பு அமைப்பு மூலம் எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே, குறித்த விடயம் தொடர்பான விசாரணகள் முன்னெடுக்கப்பட்டதோடு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோருக்கு காணாமல் போன வாகன பதிவேடுகள் பற்றிய விசாரணைகள், குறித்து தெரியப்படுத்தியுள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜெகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வாகன பதிவேடுகளை கொண்டு சென்ற, முன்னாள் போக்குவரத்து திணைக்கள நிர்வாக ஆணையாளர், திணைக்களத்திலிருந்து இடமாற்றம் பெற்று சென்ற நிலையில், மீண்டும் பதிவு திணைக்களத்திற்கு வந்து சுமார் ஒருவார காலம் அவரது நிருவாக பிரிவில் உள்ள கோவைகளை ஒழுங்கு படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இடமாற்றம் பெறும் ஒரு உத்தியோகத்தர் கோவைகளை அலுவலகத்தில் சமர்ப்பித்து செல்வதுதான் முறை, ஆனால் சுமார் 14 கோவைகளை மாத்திரமே அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ள அவர், ஏனைய கோவைகளை வடமேல் மாகாணத்துக்குரிய (KX2342) எனும் இலக்கமுடைய, உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ள காட்சி, அலுவலக CCTV கெமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எடுத்துச் சென்ற கோவைகளை திருப்பிச் சமர்ப்பிக்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அவரிடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லையென மோட்டார் வாகன பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.