போதைக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் குற்றச்செயல்களை குறைக்க சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் போதைபொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது முக்கியம் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

மேலும் அவர், சிறைச்சாலைகளிலிருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தலை இல்லாமல் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

“சிறைச்சாலைகளில் இருந்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிராக எதிர்வினையாற்றக்கூடிய திறமைமிக்க அதிகாரிகளை சிறைச்சாலை திணைக்களம் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை ஆகியவற்றிற்கு நாம் நியமித்துள்ளோம்” என பாதுகப்பு செயலாளர் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் நலன்புரி நடவடிக்கைப் பிரச்சினைகள் தொடர்பகவும், அளவுக்கதிகமாக காணப்படும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கைகளை குறைப்பது தொடர்பாகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளோர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு முன்னெடுப்புக்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம். இதற்கமைய 1000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கும் வசதிகளைக் கொண்ட விஷேட நிலையம் ஒன்று நிட்டம்புவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது எனவும் 2,000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கும் வசதிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்று வீரவில பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது..” எனவும் அவர் தெரிவித்தார்.