போதை ஒழிப்பு நடவடிக்கைகளை கடுமையான சட்ட திட்டங்களுடன் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் நிலைமைகள் குறையவில்லை – எம். எச். ஏ. ஹலீம்…

அரசாங்கம் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை கடுமையான சட்ட திட்டங்களுடன் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் நிலைமைகள் குறைந்த பாடாக தெரியவில்லை என முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

கண்டி கட்டுகஸ்தோட்டை சாஹிரா ஆண்கள் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இதனைத் தெரிவித்தார்.

நாம் எந்தளவு கல்வியிலும் விளையாட்டிலும் ஆர்வத்தை காட்டுகின்றோமோ அந்தளவுக்கு போதைப் பொருள் பாவனையில் இருந்து எமது மாணவர் சமூகத்தைப் பாதுக்காப்பதற்கான கவனத்தைச் செலுத்த வேண்டும். இது விடயம் தொடர்பாக அரசாங்கத்தினால் மட்டும் செய்யக் கூடியதொன்றல்ல. சமூகத்திலுள்ள ஒவ்வொரு பிரஜைகளும் இது சம்மந்தமாக கவனம் எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

போதைப பொருட்களின் பாவனையினால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கமாகவும், விரிவாகவும் எமது மாணவர் சமூகத்திற்கு மிகவும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். பாடசாலைகளின் வாயல்களில் இந்தப் போதைப் பொருள் வியாபாரிகள் நடமாட்டங்கள் நடைபெறுவதாக நாங்கள் அறிகின்றோம். இந்த நிலை நீடிக்குமானால் சமுதாயத்தில் பாரிய கலாசார சீரழிவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம். டி முத்திப், ஜெய்னுலாப்தீன் லாபீர், ஹிதாயத் சத்தார், அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.