போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலை, தரம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை…

போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை மற்றும் தரம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, சில வியாபாரிகள் தரம் அற்ற போத்தலில் அடைக்கப்பட்ட நீரை கூடுதலான விலைக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் நேற்று(05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரட்சியான காலநிலையினால் ஒன்பது மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட உதவிகளை வழங்குவது தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.