போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் சென்சார் கருவிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களுக்கு இந்திய விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவிலிருந்து பாலி தீவுக்கு 189 பயணிகளுடன் புறப்பட்ட ரையன் எயார் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், கடந்த மாதம் இறுதியில் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்ததில் விமானத்தின் வேகம் மற்றும் உயரத்தை காட்டும் சென்சார் கருவிகள் தவறான தகவல்களை அளித்துள்ளமை தெரிய வந்தது.
இதையடுத்து, அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் போயிங் நிறுவனம் போன்றவை கடந்த 07ம் திகதி அவசர கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளன. அதன்படி, விமானத்தின் கையேட்டில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும், அதை போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்கும் விமானிகள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் உயரத்தை காட்டும் ஏ.ஓ.ஏ சென்சார் கருவிகளின் தகவல்கள் தவறாக இருந்தால், விமானிகள் எப்படி செயற்பட வேண்டும் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்கள் விமானத்தின் கையேட்டில் இடம்பெற வேண்டும் என போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.