(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி. இவர்களின் இரண்டு வயது மகன் சுஜித் வில்சன்.
கட்டடத் தொழிலாளராக வேலை பார்த்துவரும் பிரிட்டோ, தனது வீட்டின் அருகில் உள்ள தனது வயல்காட்டில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பாக ஆள்துளை கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளார்.
ஆனால், அந்தக் கிணற்றில் தண்ணீர் வராததால், அதனை இப்போது பயன்படுத்துவதில்லை. அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தற்போது விவசாயம் பார்த்துவருகிறார் பிரிட்டோ.
இந்தக் ஆழ்துளைக் குழாய் கைவிடப்பட்டிருந்த நிலையில், மண் விழுந்து மூடியிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அந்த மண் உள்வாங்கியது.
இந்த நிலையில், வயல்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வெள்ளிக்கிழமையன்று மாலை ஐந்தரை மணியளவில் எதிர்பாராத விதமாக அந்தக் குழாய்க்குள் விழுந்தான்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் துவங்கின. குழந்தைக்கு மூச்சுத் திணறாமல் இருப்பதற்காக குழாய் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது.
இம்மாதிரி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும் சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களைச் சேர்ந்த மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பிறகு கயிறு மூலம் சுருக்கைப் போல மாட்டி, குழந்தையை மேலே இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், குழந்தையின் கைகள் சரியாகச் சிக்கவில்லை.
இதனிடையே மண் மேலும் சரிந்ததால், 28 அடியில் இருந்த குழந்தை இன்னும் ஆழத்துக்கு சென்றது. அப்போது குழந்தை கிட்டத்தட்ட 65 அடி முதல் 70 அடி ஆழத்தில் இருக்கலாம் என கருதப்பட்டது.
பின்னர், சுஜித்தை உயிருடன் மீட்க 82 மணிநேரமாக நடந்த மீட்பு பணி தோல்வியில் முடிந்தது,
சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் உடல் பிரேத பரிசோதனை முடிந்து கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.