கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதை, அந்தத் திட்டத்தை உருவாக்கி வரும் சீன நிறுவனமான CHEC வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம், கொழும்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
துறைமுக நகரத்துக்கான திட்டப் பணிகள் விரைவில் நிறைவடைய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத்திட்டம் தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்ட சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்தோம்.
எனினும், சுமார் ஓராண்டு காலம் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அரசுக்கும், நிறுவனத்துக்கும் குறிப்பிட்ட அளவு இழப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக, திட்டத்தைச் செயல்படுத்த அதிக அளவிலான பணமும், கருவிகளும் தேவைப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்து வருவதாக இந்தியா அதிருப்தி தெரிவித்ததை அடுத்து, சீனாவின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு நிறுத்தி வைத்திருந்தார் என, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது, அந்தத் திட்டத்துக்கு இலங்கை அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.