அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதிய பகல்- இரவு டெஸ்ட் போட்டி பற்றி ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பகல்- இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதிய இந்தப் போட்டியில் இளஞ்சிவப்பு நிறப்பந்து பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நியூசிலாந்தில் உள்ள பிரபல கல்வி குழுமத்தில் உள்ள பள்ளி ஒன்றிற்கு சென்றிருந்த ஜெயவர்த்தனே இந்த பகல்- இரவு டெஸ்ட் பற்றி கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் பேசுகையில், “கிரிக்கெட் தற்போது அதன் உருமாற்றத்தை இழக்க தொடங்கி உள்ளது. சிவப்பு நிறப்பந்தில் இருந்து மாறத் தொடங்கிவிட்டது. நான் எப்போதும் அதற்கு எதிராக செயல்பட மாட்டேன்.
பல வருடங்களாக பாரம்பரியமாக கடைபிடித்து வரும் ஒரு விடயத்தை மாற்றுவதை நான் விரும்பவில்லை. மாற்றம் என்பது சாதனைகளிலும், முன்னேற்றத்திலும் தான் இருக்க வேண்டும்.
அந்தப் போட்டியில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு நிறப்பந்திலும் பிரச்சனைகள் இருக்கின்றது. வெளிச்சத்தில் அதிகமாக மின்னுவதால் வீரர்களுக்கு சிக்கலை தருகிறது.
அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதிய அந்தப் போட்டியின் 3வது நாள் ஆட்டமே இதற்கு ஒரு சாட்சி.
பகல்- இரவு டெஸ்டாக பார்வையாளர்களை ஈர்க்கவும், தொழில்முறைக்காகவும் மாற்றப்பட்டுள்ளது தான். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் அதன் வடிவத்தை இழப்பதை நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
ஜெயவர்த்தனே இளஞ்சிவப்பு நிறப்பந்தை பற்றி பேசி முடித்த பிறகு மாணவர்கள் மஞ்சள் நிறப்பந்தை கொண்டு அவருடன் கிரிக்கெட் விளையாடினர்.
ஜெயவர்த்தனே நியூசிலாந்தில் நடக்கும் உள்ளூர் டி20 போட்டி தொடரான ஜோர்ஜி பை சூப்பர் ஸ்மாஷ் (Georgie Pie Super Smash) டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.