மடகஸ்கரை தாக்கிய ‘அவா’ புயலினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு…

மடகஸ்கரை தாக்கிய ‘அவா’ புயலில் சிக்கி தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

ஆபிரிக்காவின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மடகஸ்கரில், கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ‘அவா’ புயல் தாக்கியமையினால் மணிக்கு 119 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது. இதில் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகள் கடும் சேதத்துக்குள்ளகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த புயலில் சிக்கி 29 பேர் வரை உயிரிழந்ததாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 22 பேரை காணவில்லை என அரசு அறிவித்துள்ளது.

இதேவேளை, 54 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய விபத்து மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மடகஸ்கர் தீவு அடிக்கடி புயலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தாக்கிய ‘எனாவோ’ புயலுக்கு 78 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.