மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு 5 வருடங்கள் தடை விதிப்பு.

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு மத்திய அரசு 5 வருடங்கள் தடை விதித்துள்ளது.

ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் அவருக்குச் சொந்தமான “பீஸ் டிவி’க்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

ஜாகீர் நாயக்கின் மதபோதனைகள் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் நுழைய அவருக்கு அந்நாட்டு அரசுகள் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. மலேசிய அரசும் அவரது பிரசாரத்துக்குத் தடை விதித்தது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புக்கு மத்திய அரசு 5 வருடங்கள் தடை விதித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று(15) நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.