மத்திய வங்கியினை தனியாருக்கு வழங்க இரகசிய நடவடிக்கை.

மத்திய வங்கியை தனியாருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது:

கடந்த வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு மறைத்தவைகள் அதிகமாகவுள்ளன. இதில் மிகவும் முக்கியமான திருட்டு மத்திய வங்கியின் திருட்டாகும். இதற்கு பிறகு முழு மத்திய வங்கியையும் தனியாரிடம் ஒப்படைக்கப் போகிறார்கள். இதனால் மாபெரும் நஷ்டம் மாத்திரமன்றி பாரிய கொள்ளையும்,திருட்டும் இடம்பெறப்போகின்றன.

முழு நாட்டினதும் நிதி முறைமையும் உடைத் தெறியப்படுவது மாத்திரமன்றி நம்பிக்கையும் இல்லாது போகப்போகின்றது. எமது நாட்டின் சகல நிதி கொடுக்கல் வாங்கல்களையும் மத்திய வங்கியினூடாகவே மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறானதொரு பாரிய சேவையை மேற்கொள்ளும் மத்திய வங்கி மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் எமது அரசாங்கத்தினால் மத்திய வங்கிக்கு ஒரு உறுதியையும் நம்பிக்கையையும் வழங்கியிருந்தோம். நாம் எதிலும் விரலை நுழைக்கவில்லை. நிதி சபைக்கு எந்நேரங்களிலும் நாம் கட்டளையிடவில்லை.

இதனை நான் மிகவும் பொறுப்பாக கூற விரும்புகின்றேன். தீர்மானங்களை நிதிச் சபை மிகவும் சுயாதீனமாக எடுத்தது. தற்பொழுது இந்நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் நாட்டிலுள்ள முழு மக்களினதும் நிதி, வைப்பிலிடும் நிதி என்பன இறுதியாக எதியோப்பியாவில் தான் சேமிப்பில் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.