மத்திய வங்கியிலிருந்து 1300 கோடி பண மோசடி ஆதாரத்துடன் நிரூபிக்க நிதியமைச்சருக்கு பகிரங்க சவால்…

சட்டவிரோதமாக மத்திய வங்கியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 1300 கோடி ரூபா நிதி கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பகிர்ந்தளிக்கப்பட்ட விடயத்தை முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபித்துகாட்டுமாறு கூட்டு எதிர்க்கட்சி  நிதி அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, இந்த விடயம் தொடர்பில் நேரடி விவாதத்திற்கு வருமாறும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி அரசியல் உள்நோக்கத்துடன் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் 5000 ரூபா நாணயத்தாள்களாக, 1300 கோடி ரூபாவை இலங்கை மத்தியில் இருந்து பெற்று, கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு கூட்டு எதிர்க்கட்சி பகிர்ந்தளித்ததாக கூறியிருக்கின்றார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை வரலாற்றில் எந்தவொரு நிதியமைச்சரும் இவ்வாறு மத்திய வங்கியிலிருந்து பணம் வெளியேறியதாக கருத்து வெளியிடவில்லை. நிதி சட்டத்திற்கு அமைய நாணயத்தாள்களை வெளியிடுவதற்கு அதிகாரமுடைய, மத்திய வங்கி அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மற்றும் ஆளுநரின் கையொப்பத்துடனேயே நாணயத்தாள்கள் வெளியாகும். 1300 கோடியை பகிர்ந்தளிக்க வேண்டுமாயின் குறைந்தது 7 லொறிகளிலாவது அதனை ஏற்றியிருக்க வேண்டும்.

இவ்வாறான நிதி மோசடி குறித்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசேடமான நிரந்தர பிரிவு ஒன்று காணப்படுகின்றது. அந்த பிரிவிற்குக்கூட தெரியாத ஒரு விடயத்தை நிதியமைச்சர் நாட்டிற்கு தெரிவிக்கின்றார். சட்டவிரோதமாக மத்திய வங்கியில் இருந்து வெளியாகிய 5000 ரூபா தாள்கள் நாட்டில் காணப்படுவதாக அவர் கூறுகின்றார். இதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

அதனைவிடவும் இந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபித்துக்காட்டுமாறு   நாம் சவால் விடுக்கின்றோம். இது தொடர்பில் எந்த வொரு ஊடகத்திலும் நேரடி விவாதத்திற்கு வருமாறும் நாம் நிதி அமைச்சருக்கு அழைப்பு விடுக்கின்றோம். இது உண்மையென்றால் இந்த மிகப்பெரிய நிதி மோசடியை யார் செய்திருந்தாலும் தராதரம் பாராது அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த நாணயத்தாள்கள் தொடர்பில் இன்றைய நிலையில் 15 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்கு விசாரணைகளுக்காக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் 192 எழுத்து மூல ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

நாங்கள் அந்த பணத்தை பகிர்ந்தது உண்மையென்றால் 5000 ரூபா நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருக்கும் அனைவரையும் பிணை பெற்றுக்கொள்ள முடியாத வகையில் சிறையில் அடைக்க வேண்டும். அரசாங்கத்தின் தலைவர் தாம் என ஜனாதிபதி ஏற்றுக்கொள்வாராயின் பொது மக்களின் நிதி கொள்ளையடிக்கப்பட்ட இந்த மோசடி தொடர்பில் உடனடியாக தலையிட்டிருக்க வேண்டும். அது தொடர்பிலான அதிகாரிகளை அழைத்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனுடன் தொடர்புடையவர்கள் யார்? வழங்கப்பட வேண்டிய தண்டனைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை மேற்கொண்டிருக்க வேண்டும். இது ஜனாதிபதியின் கடமை எனவும் தெரிவித்திருந்தார்.