மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்காலம் நிறைவடைவதை அடுத்து இந்தப் பதவியை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் மருமகனும், பொருளாதார நிபுணருமான தினேஸ் வீரக்கொடிக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கோரிக்கையினை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய அரசியல்வாதிகள் சிலர் பிரதமரிடம் கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அர்ஜுன் மகேந்திரன் மீண்டும் அந்த பதவியில் இருக்கக்கூடாது என அரச தரப்பில் பலர் அறிக்கைகளை விட்டு வரும் நிலையில், அவருக்கு மீண்டும் மத்திய வங்கி ஆளுநர் பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுவது நல்லாட்சிக்கு பொருத்தமில்லாத செயல் எனவும் குறித்த அரசியல்வாதிகள் பிரதமரிடம் கூறியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் அர்ஜுன் மகேந்திரனுக்கு மீண்டும் அந்தப் பதவி வழங்குவது அவசியம் என்றும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என்றும் பிரதமர் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மத்திய வங்கி ஆளுநரின் பதவியை பறித்து அவரை விரட்ட நினைப்பது தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அரசியல் சதி திட்டம் என்றும், குறித்த சதிதிட்டத்திற்கு துணை போகும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் கட்சியை விட்டே நீக்கப்படுவார்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.