இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் குறித்தான கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கை இன்று கோப் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.
அத்துடன் குறித்த விசாரணை மீதான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இன்றைய தினமே தீர்மானிக்கப்படும்.
ஒருவேளை இந்த விசாரணையின் இறுதி முடிவு இன்றைய தினம் எடுக்க கூடும் என கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார் .இலங்கை மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் வினவிய போதே கேசரிக்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறியை ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தன்னுடைய உறவினருக்கு வழங்கியமை தொடர்பில் பெரும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன . இதன்படி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை உடனடியாக பதவி விலகுமாறு எதிரணியினர் போராட்டங்களை நடத்திய வலியுறுத்தி வருகின்றனர். இதன்படி இது தொடர்பில் கணக்காய்வு திணைக்களத்தினால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறித்த விசாரணைகளின் பிரகாரம் மத்திய வங்கியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பிலான அறிக்கை முழுமையாக பூர்த்தியாகி உள்ளது .