மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொதுபல சேனா முறைப்பாடு

இனவாதம் பேசுவதை தடுக்கும் வகையில் இனக்குரோதத்திற்கு எதிரான சட்ட மூலம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் இணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர் அருண் ஆரோக்கியநாதன் இந்த மனுவைத் தாக்கல் செய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும், மதச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலும் அமைந்துள்ளதோடு அரசியல் அமைப்பிற்கு முரணாக காணப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த சட்டமூலத்தில் மேலும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சா்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை இந்த சட்டமூலத்திற்கு எதிராக மேலும் பல சிவில் அமைப்புகள் மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக எமது செய்தியாளா் தெரிவித்தார்.

ஜெனீவா தீர்மானம் மற்றும் சர்வதேச அழுத்தங்களால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில கடுமையான சரத்துகளை இந்த புதிய சட்டமூலத்தில் அரசாங்கம் இணைத்துள்ளதாக சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில சரத்துக்களை இனக்குரோதத்திற்கு எதிரான சட்டமூலத்தில் சோ்த்துக்கொள்வதால் எந்த பயனும் இல்லை என்றும் அது ஜனநாயகத்துக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் சட்டவல்லுநா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.

மேலும், வெறுப்புப் பேச்சுக்கெதிராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டத்துக்கெதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை தாமும் மேற்கொள்ளவுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

இதன்மூலம், இச்சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் சமூக அமைப்புகள் ஆகியவற்றோடு, பொதுபல சேனாவும் இணைந்துள்ளது.