மனித உரிமைகள் நிலைப்பாட்டிலிருந்து கடன் மற்றும் பிற நிதிக் கடப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக, வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா. அதிகாரி, 11ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின்போதான ஆய்வுகளின் விரிவான அறிக்கையை ஜூவான் பப்லோ, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த விஜயத்தின் போது ஜூவான் பப்லோ, இலங்கை அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகத்தினர், கல்வியாளர்கள் மற்றும் அனைத்துலக சமூகத்தினர் உள்ளிட்ட பலருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.