மரண தண்டனை விதிக்கப்பட்டமையினை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு இன்று(04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இன்று உச்ச நீதிமன்றில் குறித்த இந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
குற்றவியல் சட்டத்தின் 347ம் சரத்தின் அடிப்படையில் மேன்முறையீடு செய்துள்ள துமிந்த சில்வாவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டுமென சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரியுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி அனுஜ பிரேமரட்ன ஆகியோர் துமிந்த சில்வா சார்பில் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி என்ற போதிலும் ஜனாதிபதியினால் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய திகதி அறிவிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படும் வரையில், எவ்வித ஆபத்தும் இன்றி வாழ்வதற்கான அடிப்படை உரிமை அந்த குற்றவாளிகளுக்கு உண்டு எனவும் துமிந்த தரப்பு மனுவில் சட்டத்தரணிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
துமிந்த சில்வாவிற்கு காணப்படும் உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் மேலும் குறித்த மனுவில் கோரியுள்ளனர்.