முஸ்லிம்கள் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவந்த வடக்கின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள முசலி பிரதேச சபைக்குட்பட்ட பாலைக்குழி, கரடிக்குளி, மறிச்சுக்கட்டி போன்ற கிராமங்களின் பூர்வீக இடங்களை பாதுக்காக்கும் நோக்கில் இரண்டு இலட்சம் கையெழுத்துக்கள் சேகரிக்கும் பணி இன்று (12) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் நாடு பூராகவும் உள்ள அணைத்து ஜும்மா பள்ளிவாசல்களிலும் இடம்பெற உள்ளது.
கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் யுத்தம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தமது சொந்த மண்ணில் மீள்குடியேறி வரும் நிலையில், இம்மக்களது மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கில் சில இனவாத சக்திகள் பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறே வடக்கு முஸ்லிம்களது விடிவுக்காக குரல்கொடுத்துவரும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களையும் வில்பத்து சரணாலயத்தை அழித்துவருவதாக குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே இனவாத சக்திகளதும், மறிச்சுக்கட்டி தொடர்பாக போலியான பரப்புரைகளை மேற்கொண்டுவரும் சில இனவாத ஊடகங்களின் கொட்டத்தை அடக்குவதற்காவும் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களது பூர்வீகத்தை உறுதிப்படுத்தியும் இரண்டு இலட்சம் கையெழுத்துக்கள் சேகரிக்கும் திட்டத்தை வடமாகாண உலமா சபை, அல்ஜாசிம் ஆய்வுக்கான நிலையம், உடனடி தீர்வுக்கான குழு மற்றும் வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு என்பன இணைந்து மேற்கொண்டுவருகின்றன.
இன்று வெள்ளிக்கிழமை (12-05-2015) மற்றும் அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் குறிப்பிட்ட பிரதேச பள்ளிவாசல் மஹல்லாக்களை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட இருக்கின்ற இந்த கையெழுத்து வேட்டை நிகழ்ச்சியில் அனைவரும் பங்குகொண்டு தங்களது கையெழுத்துக்களை இட்டு எமது மக்களின் நிலம் பறிபோகாமல் பாதுகாக்க உதவி செய்யும்படி வடக்கு முஸ்லிம்களுக்கான பிரஜைகள் குழு வேண்டுகோள் விடுக்கின்றது.
அவ்வாறே, கடந்த இரு தசாப்த காலத்துக்கும் மேலாக அல்லல்படும் வடக்கு முஸ்லிம்களின் வாழ்விட உரிமையை பாதுகாக்க அனைவரும் முன்வருமாறு அன்பாக அழைப்பு விடுக்கின்றது.
மேலும், எமது மக்களின் பூர்வீக நிலத்தை உறுதிபடுத்தும் இந்த பயணம் வெற்றிபெறவும் பிராத்திக்கும்படியும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.