கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய மருத்துவபீடத்தின் 02ஆம், 3ஆம் வருடங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் இன்று(27) முதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகப் பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் தெரிவித்தார்.
அத்துடன், முதலாம் வருட மாணவர்கள் 16 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு துணைபோதல், நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு சரியாக ஒத்துழைக்காமை போன்ற காரணங்களுக்காக இம்மாணவர்களில் 15 பேருக்கு 03 வாரங்களுக்கும் ஒரு மாணவனுக்கு 04 வாரங்களுக்கும் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மேற்படி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் சிலர், பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் நேற்று(26) கூடி ஆராய்ந்த பல்கலைக்கழகப் பேரவை இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்நிலையில், மருத்துவபீடத்தின் 2ஆம், 3ஆம் வருட மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர்; மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.