மலேரியாவுக்கு புதிய தடுப்பு மருந்து இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

உலகில் பாரிய உயிரிழப்பினை ஏற்படுத்தும் மலேரியாவுக்கு உரிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு கால ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்ட மலேரியா தடுப்பு மருந்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியுள்ளது.

உலகில் முழுவதும் 2013 இல் மலேரியா நோயினால் 6 லட்சத்து 27 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதில் 82 வீதம் குழந்தைகளின் உயிரிழப்பாகும். ஆப்ரிக்காவில் மட்டும் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இக்கொடிய நோயில் இருந்து மக்களை காப்பாற்ற, உலகம் முழுவதும் மருத்துவ விஞ்ஞானிகள் பல தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இங்கிலாந்தின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘கிளாக்ஸோ ஸிமித்லைன்’ மலேரியா நோய்க்கிருமிகளை எதிர்த்து அழிக்கும் புதிய தடுப்பு மருந்தினைக் கண்டுபிடித்துள்ளது.

பில்கேட்ஸ், மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த புதிய மருந்துக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் இந்த புதிய தடுப்பு மருந்தினை மருந்துகளை பல நாடுகளுக்கும் அனுப்புவது பற்றிய திட்ட அறிக்கையை, உலக சுகாதார நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுள்ளது